Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 இடங்களில் கட்டணம் வசூலித்தும்… எந்த வசதியும் இல்லை…. சுற்றுலா பயணிகள் அதிருப்தி….!!

மேகமலை அருவிக்கு செல்லும் பகுதியில் 2 சோதனை சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிப்பதால் சுற்றுலா பணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக மேகமலை அருவி விளங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த வாரத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கு மேகமலை அருவிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் படை எடுத்து மேகமலை அருவிக்கு வருகின்றனர்.

இந்நிலையில் மேகமலை அருவிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு வனத்துறையினர் தலா 30 ரூபாய் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு கோம்பைத்தொழு ஊராட்சி சார்பில் அருவிக்கு செல்லும் பகுதியில் புதிதாக சோதனை சாவடி அமைக்கப்பட்டு ஆட்டோவிற்கு 25 ரூபாய், கார்களுக்கு 50 ரூபாய் மற்றும் சுற்றுலா பேருந்துகளுக்கு 100 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் 2 சோதனை சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிப்பதால் சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில் 2 இடங்களில் கட்டணம் வசூலித்தும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி, சுற்றுலா பயணிகளுக்கு கழிப்பிட வசதி போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. மேலும் அருவியில் ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் குளிக்க வேண்டிய நிலை உள்ளது. போலீசார்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படாததால் பெண்கள் அருவியில் குளிப்பதற்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதாகவும், பெண்கள் உடை மாற்றும் அறை பராமரிப்பு இல்லாமல் கிடப்பதாகவும் புகார் அளித்துள்ளனர்.

Categories

Tech |