தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி நகைக்கடன் தள்ளுபடி வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக அரசு பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி விதி 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு விவசாயத்திற்காக பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பல்வேறு முறைகேடுகள் இந்த தள்ளுபடி விவகாரத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் வங்கி அதிகாரிகளும் இந்த முறைகேட்டில் உடந்தையாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தமிழக அரசு தகுதியான நபர்களை ஆராய்ந்து நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சுமார் 48,84,726 பேர் நகை கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்தனர். அதனை தொடர்ந்து தள்ளுபடி பெற தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கும் பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தற்போது தேர்தல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கும் பணிகள் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற தொடங்கியுள்ளது. அந்த வகையில் விக்கிரவாண்டியை அடுத்த ராதாபுரம் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் தள்ளுபடி பெறுவதற்கு தகுதியான நபர்கள் அனைவருக்கும் விரைவில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.