தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேமிப்பு பணத்தை எடுப்பதற்கு முன் தெரிந்து கொள்ள வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு தனிப்பட்ட நம்பர் வழங்கப்பட்டிருக்கும். அது 12 இலக்கங்களை கொண்ட யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் ஆகும். இந்த நம்பரை முதலில் பிஎஃப் வெப்சைட்டில் (e-SEWA) ஆன்லைன் மூலமாக ஆக்டிவேட் செய்ய வேண்டும். மேலும் ஆதார் ஓடிபி சரிபார்ப்பு மூலமாகவும் அல்லது உமாங் மொபைல் ஆப் மூலமாகவும ஆக்டிவேட் செய்யலாம். இதனையடுத்து உங்களின் பிஎஃப் எண்ணை ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் ஆதார் நம்பர் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.
இதனைத் தொடர்ந்து நீங்கள் e-SEWA வெப்சைட்டில் சென்று பிஎஃப் நம்பருடன் ஆதாரை இணைக்கலாம். அடுத்ததாக வாடிக்கையாளர்களை தெரிந்துகொள்ளுதல் (KYC) நடைமுறை, வங்கி மற்றும் பணம் தொடர்பான விஷயங்களில் கட்டாயமாக உள்ளது. இந்த நடைமுறை ஒருமுறை சரிபார்ப்பு முறையாகும். இதற்கு ஆதார் மற்றும் பான் கார்டு அவசியம் ஆகும். எந்த வங்கி கணக்கில் பிஎஃப் பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளுதல் இதில் அடங்கும்.
மேலும் நீங்கள் இந்த சரிபார்ப்பு முடித்ததும் அதன்பின் நிறுவனம் சார்பாக ஒப்புதல் அளிக்கப்படும். இதன் பிறகு கேஒய்சி முடிக்கப்பட்ட உடனே ’verified’ என்ற ஸ்ட்டேட்டஸ் அப்டேட் ஆகும். இந்நிலையில் அனைவரும் தங்களது பிஎஃப் கணக்கில் கட்டாயம் ஒரு நாமினியை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் பிஎஃப் கணக்குதாரரின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம். மேலும் இவரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், உறவுமுறை, புகைப்படம், முகவரி, ஆதார் மற்றும் வங்கி கணக்கு விபரம் போன்ற அனைத்து விவரங்களையும் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.