தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெரம்பலூர் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி 1-வது வார்டில் திமுக கூட்டணி வேட்பாளர் ரபியுதின் 400 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 3வது வார்டில் திமுகவின் கூட்டணி வேட்பாளர் நூருன்னிசா வெற்றி பெற்றுள்ளார். விருத்தாசலம் நகராட்சி 2-வது வார்டில் தேமுதிக வெற்றி பெற்று உள்ளது. தூத்துக்குடி கோவில்பட்டி நகராட்சி 3-வது வார்டில் அமமுக வேட்பாளர் கருப்புசாமி வெற்றி பெற்றுள்ளார்.