வாலிபர் கொலை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் இருக்கும் டாக்டர் குடியிருப்பில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆனைமலையில் தேங்காய் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனின் சகோதரிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அகல்யா என்பவருக்கும் குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி பரமேஸ்வரி தனது சகோதரரான பரமேஸ்வரனிடம் கூறியுள்ளார். எனவே பரமேஸ்வரன் நியாயம் கேட்பதற்காக அகல்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பரமேஸ்வரனுக்கும் அகல்யாவின் கணவர் தமிழ் செல்வனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் அவரது மனைவி மற்றும் சிலர் பரமேஸ்வரனை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த பரமேஸ்வரன் மயங்கி விழுந்துள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேட்டைக்காரன் புதூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பரமேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து ஆனைமலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பரமேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டன், கார்த்திகேயன், ராஜ்குமார், ஸ்ரீ ஆகாஷ், ஆண்டனி, கோகுல் குமார், ராகவேந்திரன், அகல்யா, தமிழ்செல்வன், பானுமதி உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.