தமிழகத்தில் 27 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இவற்றில் மொத்தம் 12 ஆயிரத்து 838 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு பல்வேறு போட்டியாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் சென்னையில் மட்டும் மந்தமாகவே நடைபெற்றது. இந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னை மாநகராட்சி 23வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ராஜன் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு 3,953 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் அங்கு 23வது வார்டில் அதிமுக 2369 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், திமுக 2271 வாக்குகள் பெற்று 3வது இடமும் பெற்று இருக்கின்றன. திமுக, அதிமுகவை ஒரே போடாய் போட்டு சுயேச்சையாக வெற்றி பெற்று இருப்பது, பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.