ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காந்தி திடல் அருகில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு முன்பு இருந்த ராட்சத மரம் காய்ந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாலை 5 மணியளவில் ராட்சத மரம் முறிந்து பி.எஸ்.என்.எல் அலுவலக கட்டிடத்தின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இந்த சத்தத்தை கேட்டவுடன் பொதுமக்கள் விரைந்து சென்று பார்வையிட்டு பி.எஸ்.என்.எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊழியர்கள் சரிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் மரம் முறிந்து விழுந்ததால் கட்டிடத்தின் மேற்கூரை பலத்த சேதமடைந்தது. இந்த சம்பவம் அதிகாலை நேரத்தில் நடைபெற்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.