சந்தன மரத்தை வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பரங்கிரி வேலுப்பிள்ளை பூங்கா அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினருக்கு பூங்காவுக்குள் இருந்து மரத்தை வெட்டுவது போல சத்தம் கேட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் பூங்காவுக்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருந்த வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அழகேசன் என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே இரண்டு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இதனை அடுத்து அழகேசன் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதன்பின் வனத்துறையினர் அழகேசனை கைது செய்து அவர் யாருக்காக சந்தன மரத்தை வெட்டினார்? எங்கு கடத்த திட்டமிட்டிருந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.