கோட்டு மாடியில் இருந்து கீழே குதித்து வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் எல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டுசாமி, பாலச்சந்தர் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் எல்லப்பன், பட்டுசாமி, பாலசுந்தரம் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் ராஜா ஆகியோர் மீது அதே கிராமத்தில் வசிக்கும் பரிமளா என்பவர் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த 4 பேரையும் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள எஸ்.சி., எஸ். டி. நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்கள் முன் ஜாமீன் கேட்டிருந்த நிலையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பட்டுசாமி நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் பட்டுசாமிக்கு இடுப்பு, கை, கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் பட்டுசாமியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.