மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் சுந்தரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொத்தனாரான வசந்த குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். சில நாட்களில் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதால் வசந்தகுமார் அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். இந்நிலையில் வசந்தகுமார் ஆசாரிபள்ளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் பாம்பன் விளை பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அனீஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வசந்தகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வசந்தகுமார், மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த அனீஷ், பிரதீஸ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் அளித்த சிகிச்சை பலனின்றி வசந்தகுமார் பரிதாபமாக இறந்துவிட்டார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.