லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் (வயது 73). இவர் 5 வது கால்நடை தீவன ஊழல் வழக்கில் கடந்த 15ஆம் தேதி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளநிலையில் ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராஞ்சியில் உள்ள மருத்துவ அறிவியல் நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது லாலு பிரசாத் சிகிச்சை அளித்துவரும் 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பேசுகையில், “லாலு பிரசாத் யாதவின் ரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் ஏற்ற இறக்கமாக உள்ளது. காலையில் சர்க்கரை அளவு70mg/dl என இருந்தது. ஆனால் மதியம்240mg/dl ஆக உள்ளது. அவர்கள் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 150 முதல் 160 வரை ஏற்ற இறக்கமாக உள்ளது. மேலும் தற்போது அவரது சிறுநீரகம் 20 சதவிகித திறனில் மட்டுமே செயல்படுகிறது. அவரது உடல்நிலை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” என அவர்கள் கூறினார்கள்.
முன்னதாக 5 வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையும் 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சிபிஐ கோர்ட்டில் நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கதாகும். கால்நடை தீவன வழக்குகளில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கிறார். அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் தற்போது ரீம்ஸ்ல் சிகிச்சை பெற்று வருகிறார்.