மன்னார்குடி அருகே லஞ்ச வழக்கில் சார் பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் வினோதினி. இவருக்கு 40 வயது. இவர் கடந்த 21 ஆம் தேதி அன்று மன்னார்குடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு சென்ற அவர் சார்பதிவாளர் அலுவலகர் தினேஷிடம் தனது நிலத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டும். அந்த இடத்தில் சுமார் 300 சதுர அடியில் வீடு இருந்த நிலையில் அதனை இடித்து விட்டதாகவும், பத்திரத்தில் வீடு இருப்பதாக குறிப்பிட் டத்தை நீக்கி சான்றிதழ் தர வேண்டும் என்று வினோதினி விண்ணப்பித்தார்.
சார்பதிவாளர் தினேஷ் இவருக்கு 35 வயதாகிறது . இவர் பத்திரத்தில் வீடு இருப்பதாக குறிப்பிட்ட இடத்தை நீக்கி சான்றிதழ் தர வேண்டும் என்றால் தனக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். மேலும் லஞ்ச பணத்தை பத்திர எழுத்தர் கென்னடி(52) என்பவர் மூலம் பெற்று கொள்வேன் என்று தினேஷ் கூறியுள்ளார். தினேஷ் சொன்னதையடுத்து இதற்கு வினோதினி சரி என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து வந்து விட்டார். பின்னர் ஏற்றுகொள்ளாத அவர் திருவாரூர் லஞ்சஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, சித்ரா மற்றும் காவல் துறையினர் ரசாயனம் தடவியுள்ள ரூபாய் நோட்டுகளை வினோதினியிடம் கொடுத்துள்ளனர். அவர் ரசாயனம் தடவியுள்ள ரூபாய் நோட்டுகளை சார்பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள பத்திர எழுத்தர் கென்னடியின் அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். அவரை பின் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரும் சென்றனர்.
அங்கு சென்ற வினோதினி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பத்திர எழுத்தர் கென்னடியிடம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து கென்னடியை அருகில் இருக்கும் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு நடத்தபட்ட விசாரணையில் தினேஷ் சொன்னபடி கென்னடி பணத்தை வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து தினேஷ் மற்றும் புரோக்கராக செயல்பட்ட பத்திர எழுத்தர் கென்னடி ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சார்பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர் இருவரும் லஞ்சம் வாங்கிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.