அயர்லாந்தில் கார்க் பகுதியில் வசித்துவருகிறார்கள் கால்வின் – மேரி தம்பதி. இவர்களுக்கு பிரியா (5), நோவா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இரண்டு நாள்களுக்கு முன்பு, கால்வின் காலையில் பணிக்குச் சென்ற பிறகு மேரி தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, திடீரென்று மேரிக்கு வலிப்பு ஏற்பட்டு தரையில் விழுந்துள்ளார். இதைப் பார்த்த சிறுமி பிரியா பயந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தாயை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த சிறுமிக்கு, திடீரென்று ஒரு யோசனை ஏற்பட்டுள்ளது. மேரியின் ஐபோனில் உள்ள ஃபேஸ்டைம் செயலியைப் பயன்படுத்தி தனது தந்தையை தொடர்புகொண்டுள்ளார். அதில், ‘அப்பா பயமாக இருக்கிறது. அம்மா தேநீர் அருந்திக்கொண்டே தரையில் விழுந்துவிட்டார்கள்’ என்று கூறி தனது கேமராவை சுற்றியும் காட்டியுள்ளார்.
அப்போது, கால்வின் தனது மனைவி தரையில் கிடப்பதைப் பார்த்து நிலைமை சரியில்லை என்பதை அறிந்துகொண்டார். இதையடுத்து, உடனடியாகக் கால்வினால் வீட்டிற்குச் செல்லமுடியாத காரணத்தினால், மேரியின் தங்கையை தொடர்புகொண்டு விஷயத்தை சொல்லியுள்ளார்.
அதன்பின், உடனடியாக மேரியைக் காண வீட்டிற்குச் சென்ற அவரது தங்கை, கதவு அடைக்கப்பட்டிருந்ததால் திறப்பதற்கு சிரமப்பட்டுள்ளார். கதவு தட்டும் சத்தம் கேட்டு பிரியா திறந்துள்ளார்.
அதன்பின், அவசர ஊர்தியை வரவழைத்து உடனடியாக மேரியை கார்க் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். பின்னர் மேரியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு பக்கவாதம் வந்திருப்பதைக் கண்டுபிடித்தனர். தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று குணமாகிவருகிறார்.
கால்வின் தனது மகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்புதான், ஃபேஸ்டைம் செயலிலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்துள்ளார்.