Categories
தேசிய செய்திகள்

சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல்: பிரதமருக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்

பாகிஸ்தானிலுள்ள சீக்கிய குருத்வாரா மீது கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் நடந்த சுவடு மறைவதற்குள் சீக்கிய இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். ஆகவே அனைத்துக் கட்சி சீக்கிய குழுவினரை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் எனக் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரதாப் சிங் பாஜ்வா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற (மாநிலங்களவை) உறுப்பினரான பிரதாப் சிங் பாஜ்வா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தானில் கடந்த 70 ஆண்டுகளாக சிறுபான்மையினரின் நிலை பரிதாபமாக உள்ளது. குருநானக் தேவ் பிறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த இடத்தின் பெயரையும் மாற்றுவோம் என அவர்கள் கூறுகின்றனர்.

நங்கானா சாகிப் குருத்வாராவை நாங்கள் காண வேண்டும். பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் நிலைமை குறித்தும் அறிய வேண்டும். பாதிக்கப்பட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வேண்டும்.

ஆகவே பிரதமரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அல்லது வெளியுறவுத் துறை முக்கிய அலுவலர்கள் தலைமையில் சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அனைத்துக் கட்சிக் குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் 25 வயதான சீக்கிய இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் குருத்வாரா மீது கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்குதல் நடந்துள்ள நிலையில் சீக்கியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

முன்னதாக, ஜகஜீத் கவுர் என்ற சீக்கியப் பெண் கட்டாய மதமாற்றம் (இஸ்லாம்) செய்யப்பட்டு திருமணமும் செய்துவைக்கப்பட்டார். இதுபோன்று பாகிஸ்தானில் சிறுபான்மையின சீக்கியர்களுக்கு எதிராக தொடர்ந்து நடந்துவரும் இந்தச் சம்பவங்கள் இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் மற்ற நாடுகளுக்கு அறநெறிகளை போதிப்பதை விட்டுவிட்டு தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கு எதிரான விரோதசெயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சர்வதேச சமூக செயற்பாட்டாளர்களின் வலியுறுத்தலாக உள்ளது.

Categories

Tech |