ஈராக்கில் உள்ள பாக்தாதில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி கசோம் சுலைமானி உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க மக்களின் நலன் கருதியே கசோம் சுலைமானி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் சுலைமானியின் மரணத்துக்கு கண்டிப்பாக பழி தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் நாடாளுமன்றம் 290 பேரும் ஒருமித்த குரலில், ‘அமெரிக்காவுக்கு சாவு இருக்கு’ (Death for America) என்று முழக்கமிட்டனர். அப்போது ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி, ‘ட்ரம்ப், இது ஈரான் தேசத்தின் குரல். கவனியுங்கள்’ என்று எச்சரித்தார். ஈரான் ராணுவத் தளபதி கசோம் சுலைமானி உடல் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) ஈரானுக்கு வரவழைக்கப்பட்டது. அவருக்கு ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற ஈரானிய நகரங்களில் மாபெரும் இறுதி ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.