Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குவாரியில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பன்னியாமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. இதே ஊரைச் சேர்ந்த கதிர்வேல் குமார் மகன் சிவா(8), இவரது தம்பி அழகுராஜாவின் மகள் மோனிகா(9). இவர்களுடன் அதே ஊரைச் சேர்ந்த தர்ஷிணி, சபரி, லாவண்யா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தேங்கிக் கிடந்த நீரில் குளிக்கச் சென்றுள்ளனர்.

Image result for நத்தம் கல்குவாரி

அப்போது சிவாவும், மோனிகாவும் நீருக்குள் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட மற்ற சிறுவர்கள் ஊருக்குள் ஓடி வந்து கிராம மக்களிடம் சம்பவம் பற்றி கூறியுள்ளனர்.

உடனே அங்கு சென்ற கிராம மக்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த மோனிகாவின் உடலை மீட்டனர். தொடர்ந்து சிறுவனின் உடல் கிடைக்காத நிலையில், சம்பவம் குறித்து நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த ஆறு பேர் கொண்ட வீரர்கள் குழுவும் சேர்ந்து சிவாவின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் அங்கு சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். அப்போது அங்கு தாசில்தார் ராதாகிருஷ்ணன், கிராம அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோரும் இருந்தனர்.

Image result for நத்தம் கல்குவாரி

இரவு நேரமானதை அடுத்து அங்கு மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. 30 அடி பள்ளத்திற்கு நீர் நிரம்பியிருந்ததால் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து ஆழ்குழாய் கிணற்றில் பயன்படுத்தப்படும் கேமராவை தண்ணீருக்குள் செலுத்தி மானிட்டர் மூலம் சிறுவனின் உடல் கிடந்த இடத்தைக் கண்டறிந்தனர்.

பின்னர் தீயணைப்பு மீட்பு பணி வீரர் ஞானசுந்தர் அந்த இடத்தில் நீருக்குள் மூழ்கி சிறுவனின் உடலை மீட்டுக் கொண்டு வந்தார். இதை தொடர்ந்து மீட்கப்பட்ட மோனிகா மற்றும் சிவாவின் உடல்கள் நத்தம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |