டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) வளாகத்தில் பருவநிலைத் (செமஸ்டர்) தேர்வுப் பதிவை ஒத்திவைக்கக்கோரியும், தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று அமைதிப் பேரணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையோடு வந்து அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது.
இந்தச் சம்பவத்தில், ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் உள்ளிட்ட 50 பேர், சில ஆசிரியர்கள் காயமடைந்தனர். இது நாடெங்களிலும் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தின் பின்புலம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
கைகலப்பில் தொடங்கி வன்முறை வரை…
புதிய பருவநிலைத் தேர்வுக்காக ஜே.என்.யூ. மாணவர்கள் தங்களது விவரங்களைப் பல்கலைக்கழக இணைதளத்தில் பதிவிடுவதைத் தடுக்கும்விதமாக, கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 3ஆம் தேதி) குறிப்பிட்ட சில மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இணையதள மையத்துக்குள் புகுந்து வைஃபை கருவியைச் செயலிழக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கல்லூரி அலுவலர் ஒருவர் கூறுகையில், “வெள்ளி மதியம் 1 மணி அளவில் 15 இருந்து 20 மாணவர்கள், தடாலடியாக இணையதளச் சேவை மையத்துக்குள் புகுந்து, அறையின் கதவை தாழிட்டனர். பின்னர், அறையிலிருந்த வைஃபை கருவிகளைச் செயலிழக்கச் செய்தனர்” என்றார்.
இதன் காரணமாக, அவர்களுக்கும், இன்னொரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் அது கைகலப்பில் முடிந்துள்ளது. வைஃபை கருவிகளைச் செயலிழக்கச் செய்த மாணவர்கள் சிசிடிவி கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாவும், அவர்கள் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வைஃபை இல்லாமல் போனதால் பெரும்பாலான மாணவர்கள் பருவநிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கமுடியாமல் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று அமைதிப் போராட்டம் நடைபெற்றுள்ளது. அப்போதுதான் இந்த வன்முறைச் சம்பவத்தை அந்தக் குப்பல் அரங்கேற்றியுள்ளது.
வெள்ளிக்கிழமை நடந்த கைலப்பே, நேற்று வன்முறைக்கு முழு முதற்காரணம் என்பதே மாணவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. வைஃபை கருவியை செயலிழக்கச் செய்து, வன்முறையில் ஈடுபட்ட முகமூடி கும்பல், ஆர்.எஸ்.எஸ்.இன் மாணவச் சங்கமான அகில பாரதிய வித்யார்தி பரிஷாத்தைச் (ABVP) சேர்ந்த மாணவர்கள் என இடதுசாரி சங்க மாணவர்கள் கூறுகின்றனர்.
முன்தாக, பல்கலைக்கழகத்தின் பெரியார் மாணவ விடுதியில் ஞாயிறன்று காலை தங்கள் சங்கத்தைச் சேர்ந்த 25-30 மாணவர்கள் தாக்கப்பட்டனர். அந்தச் சம்பவத்துக்கு இடதுசாரி மாணவர்களே காரணமென அகில பாரதிய வித்யார்தி பரிஷாத் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.