சென்னையில் வாட்சப் குரூப் மூலம் விலையுயர்ந்த வெளிநாட்டு போதைப்பொருளை விற்பனை செய்து வந்த 3 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் செய்துள்ளனர்.
சென்னை வடபழனி பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து வடபழனி காவல் துறை அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் நேற்றைய தினம் வடபழனி 100 அடி சாலையில் சந்தேகிக்கும் வகையில் மாணவன் ஒருவன் சென்று கொண்டிருந்தான்.
அவனை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளான். இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் அவரிடம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவனிடம் விலை உயர்ந்த வெளிநாட்டு போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவன் தெரிவித்த பதில்களின் அடிப்படையில்,
சென்னை ராமாபுரத்தை சேர்ந்த விஷால், வருண், ஹரிஷ் ஆகிய மூன்று கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொள்கையில், ஆன்லைன் மூலம் நெதர்லாந்திலிருந்து போதைப்பொருட்கள் வாங்கியதாகவும், அதை கல்லூரி மாணவர்களுக்கு விற்பதற்காக வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கி அதில் போதை பொருள் தேவைப்படுகிறது என்று கூறுபவருக்கு ரகசிய குறியீடு அளித்து தாங்கள் சொல்லும் இடத்திற்கு வரவழைத்து வினியோகம் செய்வதாகவும் கூறிய அவர்கள்,
ஒரு கிராம் போதைப் பொருள் ரூபாய் மூன்று ஆயிரத்திற்கும் மேல் விற்பனையாகும் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இவர்களுக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.