நீதிமன்ற உத்தரவின்படி போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கோவில் இடிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அயன்பேரையூர் கிராமத்தில் சாலை ஓரத்தில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் அறங்காவலர் பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் கோவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும் , போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் கோவிலை அகற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவிலை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 15 நாட்களுக்குள் கோவிலை இடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அந்த உத்தரவின்படி கோவில் இடிப்பதற்கு போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் அங்கு சென்றுள்ளனர். அப்போது 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், இந்து அமைப்பினரும் இணைந்து கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து வெளியேறச் செய்துள்ளனர். இதனை அடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் கோவில் இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.