கடலூரில் தேர்தல் பகை காரணமாக பிரச்சாரம் செய்த நபரின் குடிசையை கொளுத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த பாப்பன் கொல்லை மேற்கு நகரில் வசித்து வருபவர் ராஜதுரை. இவர் அதே பகுதியில் கட்டிடப் பணிகளுக்கு தேவையான ஹலோ பிளாக் என்னும் பொருளை கடை அமர்த்தி விற்பனை செய்து வருகிறார். கடைக்கு அருகாமையிலேயே தங்க வேண்டும் என்பதற்காக ஓரிரு மீட்டர் தொலைவில் குடிசை ஒன்றை அமைத்து அதில் ஓய்வெடுத்து வந்துள்ளார்.
இவ்வாறு இருக்கையில் நேற்று பணிகள் முடிந்தபின் கடையை பூட்டிவிட்டு குடிசையில் வந்து உறங்கியுள்ளார் ராஜதுரை. அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 3 மர்ம நபர்கள் பெட்ரோலை குடிசை மீது ஊற்றி குடிசைக்கு தீ வைத்தனர். கருகிய வாசனை வருவதை உணர்ந்த ராஜதுரை பதறியபடி எழுந்து பார்த்தபோது குடிசை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
அலறியடித்தபடி வெளியேறி கடையில் இருந்த மண் மற்றும் தண்ணீரை குடிசை மீது ஊற்றி அணைக்க முயன்றார். ஆனால் அவரால் முடியாத காரணத்தினால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் தீயை அணைத்தனர். பின் இது குறித்து காவல் நிலையத்தில் ராஜதுரை புகார் அளிக்க விசாரணை மேற்கொண்டதில்,
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற சக்திவேல் என்பவருக்கு ராஜதுரை பிரச்சாரம் செய்து தீவிர களப்பணியில் ஈடுபட்டதன் காரணமாக ஏற்பட்ட தேர்தல் பகையால் தான் குடிசை எரிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும், ராஜதுரையை கொலை செய்ய மர்ம நபர்கள் திட்டமிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது குடிசைக்கு தீ வைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.