தி.மு.க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்று 21 மாநகராட்சிகளை கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் போன்றவற்றிற்கு அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக 60.70 சதவீதம் வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாகின. இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 279 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
மேலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அனைத்து மையங்களிலும் ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பான முறையில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த பணியில் சுமார் 30 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. இதனையடுத்து வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்நிலையில் ஆரம்பம் முதலே தி.மு.க-வின் வேட்பாளர்களே முன்னிலை வகித்தனர். அதன்படி நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் தி.மு.க வேட்பாளர்களின் கையே ஓங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 21 மாநகராட்சிகளிலும் தி.மு.க அமோக வெற்றி பெற்றது. பெரிய நகரமான சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்தம் 200 வார்டுகளில் தி.மு.க 153 இடத்தையும் மற்றும் அ.தி.மு.க 15 இடத்தையும் பிடித்தனர்.
அதிலும் குறிப்பாக அதி.மு.க.வின் கோட்டையாக விளங்கும் கொங்கு மண்டலத்திலும் தி.மு.க வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதேபோல் மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் தி.மு.க 132 இடங்களையும், அதி.மு.க 3 இடங்களையும் மற்றவை 3 இடங்களையும் கைப்பற்றியது.மேலும் 489 பேரூராட்சிகளில் 435 இடங்களை தி.மு.க.வும், 15 இடங்களை அ.தி.மு.க.வும் மற்றவை 25 இடங்களையும் பிடித்தது.இவ்வாறு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது, வேட்பாளர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.