கார் விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்ட பூபதி என்ற மகன் இருந்துள்ளார். இவர் பனியன் செக்கிங் சென்டர் நடத்தி வந்துள்ளார். இவருக்கும் அனுப்பர்பாளையம் பகுதியில் வசிக்கும் பல்லவிக்கும் கடந்த 1 1\2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஈரோடு சென்று விட்டு அவினாசி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவினாசி பழங்கரை அருகில் கார் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக வைத்திருந்த ஊர் பெயர் கம்பத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கார் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பலத்த காயமடைந்த கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அவினாசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி அவினாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.