தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் பெரும்பாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடைபெற்று வந்தன. தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நேரடியான முறையில் நடத்தப்படும் என பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுத்துள்ள நிலையில் நேரடி தேர்வுகள் நடத்துவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் மாநில அரசுகள் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கண்டிப்பாக நேரடி தேர்வுகள் நடத்தப்படுவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மாநில வாரியங்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்றவைகள் நேரடி தேர்வுகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துஅனுபா ஸ்ரீவஸ்தா என்பவர் பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இவ்வாறு மாணவர்களிடம் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் இத்தகைய மனுக்களை நீதிமன்றம் கண்டித்துள்ளது எனவும் மேலும் எதிர்காலத்தில், இதுபோன்ற மனு தாக்கல் செய்யப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.