மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கரும்புக்கான ஊக்கத் தொகை 6 கோடி ரூபாயை வாங்கித்தருமாறு புகார் மனு அளித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முண்டியம்பாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கரும்பு ஆலை ஒன்று உள்ளது. இந்த கரும்பு ஆலையில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த கரும்புகளை விற்பனை செய்துள்ளனர். கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் அரசாங்கம் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை ஒன்றினை அறிவித்துள்ளது. ஆனால் கரும்பு ஆலை அரசாங்கம் அறிவித்த ஊக்கத் தொகையை விவசாயிகளுக்கு தராமல் இன்றுவரை காலம் தாழ்த்தி வருகிறது.
இதுவரை 5,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 6 கோடியே 70 லட்சம் பணம் தர வேண்டியுள்ளது. எனவே இதுகுறித்து அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கலிவரதன் மற்றும் ராஜேந்திரன், ராமச்சந்திரன், ஜெய கோபி, செல்வராஜ், நாகராஜ் போன்ற பல விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இந்த மனுவை பார்த்த ஆட்சியர் மோகன் இதுகுறித்து விசாரணை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.