மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை அடையாரில் இருக்கும் ராணுவ பயிற்சி தளத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவகுமார் தனது மகன் சரண் என்பவருடன் கோவையில் இருக்கும் தனியார் கண் சிகிச்சை மையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து தந்தை மகன் இருவரும் ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் இருக்கும் ராணுவ முகாமில் பொருட்களை வாங்கிக்கொண்டு பாலக்கோடு நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் மதுக்கரை மரப்பாலம் அருகில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டு வலதுபுறம் திரும்பியுள்ளது.
அப்போது மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் லாரி மோதியதால் சிவகுமாரும், சரணும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் சக்கரத்தில் சிக்கி சிவகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த விபத்தில் சரண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த மதுக்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.