ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் போர் பதற்றமானது நீடித்து வந்தால் இந்திய நாட்டில் பெட்ரோல்- டீசல், கோதுமை, உலோகங்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது போர் பதற்றத்தால் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 96.7 டாலராக அதிகரித்து உள்ளது. இதனிடையில் இந்த கச்சா எண்ணெய் விலை ஏற்றம் 2014ம் ஆண்டு செப்டம்பருக்கு பின் அதிகம் எனக் கூறியுள்ள பொருளாதார நிபுணர்கள் உக்ரைன்-ரஷ்யா இடையில் போர் நடந்தால், இயற்கை எரிவாயு விலை 10 மடங்கு அதிகரிக்கும் என்றும் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்றும் கணித்துள்ளனர்.
இதையடுத்து கோதுமை ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா முதல் இடத்திலும், உக்ரைன் 4-வது இடத்திலும் இருப்பதால் கருங்கடல் பகுதியில் இருந்து தானியங்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டால், கோதுமை விலை உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆகவே ரஷ்யா மேல் விதிக்கப்படும் பொருளாதார தடைகளின் அச்சுறுத்தல் காரணமாக வாகன எக்ஸாஸ்ட் சிஸ்டம் மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பல்லேடியம் என்ற உலோகத்தின் விலை சமீபத்திய வாரங்களில் உயர்ந்துள்ளது..