மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு முன்பாக மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அடிப்படை வசதிகூட இல்லாத மாற்று திறனாளிகள் கட்டிடத்தை புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை முறையாக அறிவிப்பு பலகைகள் மூலம் தெரிவிக்க வேண்டும் எனவும், தேசிய அடையாள அட்டை வழங்கும் போது அதற்கான அறிவிப்பை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகள் நல கட்டிடத்தில் மனு கொடுக்கும் போது அதற்கான ஒப்புகைச் சீட்டை வழங்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகளை கூற மாதம் 2 முறை குறைகேட்பு கூட்டத்தை முறையாக மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை கூறியுள்ளனர்.
இந்த போராட்டம் குறித்து விழுப்புரம் காவல்துறைக்கும், வருவாய் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் எதையும் ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என ஆட்சியர் உறுதியளித்த பின்னரே அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.