வாஷிங்டன்: ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் செல்வாக்குமிகுந்த ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவத் தளபதி அபு மஹதி அல் முகந்திஸி உள்பட ஏழு பேரும் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பழித் தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்தது. மேலும், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க ராணுவ முகாமை குறிவைத்து ஈரான் ராணுவத்தின் காத்ஸ் பிரிவு இந்தத் தாக்குதலை நடத்தியது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “பதில் தாக்குதல் நடத்தும்விதமாக, அமெரிக்காவின் சொத்துகளைத் தாக்கப்போவதாக ஈரான் கருத்து தெரிவித்துவருகிறது. அப்படித் அமெரிக்காவின் சொத்துக்கள் தாக்கப்படும்பட்சத்தில் எங்களது எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும். அதற்காக நாங்கள் 52 ஈரானிய இடங்களை குறிவைத்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.