லாரியை மீட்க முயற்சி செய்தபோது பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மீட்பு வாகன ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரியை அப்துல் ரசாக் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் நடுவட்டம் அருகே டி.ஆர்.பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. அதன்பிறகு லாரி சாலையோர பள்ளத்தில் சிக்கி ஒரு புறமாகச் சரிந்து நின்றுள்ளது. இதனை அடுத்து ஊட்டியை சேர்ந்த சித்திக் மற்றும் ரூபன் ஆகியோர் மீட்பு வாகனத்தில் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சித்திக் லாரி மீது ஏறி நின்ற போது எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்துவிட்டது. இதனால் சித்திக் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் ரூபனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரூபனினை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.