போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு வழி சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வழியாகத்தான் கும்பகோணம், குடவாசல், தஞ்சாவூர், கொரடாச்சேரி, திருச்சி, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் மற்றும் பலவிதமான வாகனங்கள் செல்கின்றன. அந்த பகுதியில் சாலை குறுகிய அளவில் இருப்பதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஆகியோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே இந்த பகுதியில் ஒரு வழி சாலை அமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.