Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தாது மணல் கொள்ளையை தடுக்க…. அரசு அதிரடி நடவடிக்கை…..!!!

தமிழகத்தில் தாது மணல் கொள்ளையை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள தாது மணல் கொள்ளை தொடர்பாக கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழக தொழில்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தாதுமணல் எடுப்பதற்காக 7 நிறுவனங்களுக்கு திருநெல்வேலியில் 52 உரிமங்கள், தூத்துக்குடியில் 6, கன்னியாகுமரியில் 6 என 64 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாகவும்  புகார்கள் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து தாது மணல் எடுப்பதற்கும், வாகனங்களில் கொண்டு செல்வதற்கும் 2013-ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பிறகும், சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்ததால்  5,832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பை தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் வசம் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை பறிமுதல் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

தற்போது தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி மற்றும் சத்யபிரதா சாஹு தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கபட்டுள்ளது. மேலும் அவர்கள் அளித்த அறிக்கையில் மூன்று மாவட்டங்களிலும் 234 ஹெக்டேர் பரப்பில் ஒரு கோடியே ஒரு லட்சம் டன் தாது மணல் சட்டவிரோதமாக எடுக்கபட்டுள்ளது. இந்நிலையில் ஒரு கோடியே 55 லட்சம் டன் இருப்பில் உள்ளதும் தெரியவந்துள்ளது என்றும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து இருப்பில் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை மத்திய அரசு நிறுவனத்திடம் ஒப்படைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் அந்த பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Categories

Tech |