திருமணமாகி 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கரிசல்குளம் பகுதியில் விவசாயியான வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நடராஜமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடராஜ மூர்த்திக்கும், அதே பகுதியில் வசிக்கும் அனுசங்கீதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் நடராஜமூர்த்தி கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தும் குனமாகததால் நடராஜமூர்த்தி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நடராஜமூர்த்தி அவரது தோட்டத்தில் உள்ள பயிர்களை அழிக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டு அங்கேயே மயங்கி கிடந்துள்ளார்.
இந்நிலையில் வெளியே சென்ற நடராஜ மூர்த்தி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். இதனையடுத்து அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது நடராஜமூர்த்தி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் நடராஜா மூர்த்தியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நடராஜமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று நடராஜமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.