மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் தேவநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் தூத்துக்குடி டூவிபுரத்தில் வசிக்கும் செல்வராஜ் என்பவரும் நெல்லையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் 2 பேரும் கம்பெனி வேலைக்காக உடன்குடி சென்றிருந்தனர். அதன்பின் வேலை முடிந்து 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் காயாமொழி அருகில் எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.