சொத்து பிரச்சினையில் வாலிபரை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலசேர்ந்தபூமங்கலம் பகுதியில் பச்சை பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதில் ஒரு மனைவியின் மகன் சின்னத்துரை, மற்றொரு மனைவியின் மகன் முனியசாமி மற்றும் 3-வது மனைவிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பச்சை பெருமாள் இறந்துவிட்டார். இதனால் அவரது சொத்துகளை பங்கு பிரிப்பதில் சின்னதுரையின் குடும்பத்திற்கும், முனியசாமி குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ஆத்தூர் மெயின் பஜாரில் உள்ள ஓட்டல் முன்பு சின்னத்துரையின் மகனான டார்வின் என்பவர் அவரது நண்பரான வெங்கடேசன் என்பவரோடு பேசி கொண்டிருந்தார்.
அங்கு டார்வினின் சகோதரரான தீபன் மற்றும் அவரது உறவினரான தனசேகரன் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் அங்கு வந்த முனியசாமி டார்வினின் தலை கழுத்து பகுதியில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த வெங்கடேசனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனை பார்த்து ஓடி வந்த தீபன் மற்றும் தனசேகரனை பார்த்ததும் முனியசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முனியசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.