விவசாயியிடம் லஞ்சம் கேட்ட பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள டி.கிளியூர் பகுதியில் வசித்து வரும் விவசாயியான கணேசன் என்பவர் தன்னுடைய 559 நெல் மூட்டைகளை விற்பனை செய்ய ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அதில் குறிப்பிட்ட தேதியில் நெல் மூட்டைகளை பாண்டுக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். இதனைதொடர்ந்து நெல் கொள்முதல் செய்துவிட்டு அதற்க்கான ரசீது கேட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த பொறுப்பு அதிகாரியாக பணியில் இருந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பில் கலெக்டரான ராமராஜ்(52) என்பவர் ஒரு நெல் மூட்டைக்கு 60 ரூபாய் வீதம் மொத்தம் 33,540 ரூபாயை லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் பணம் கொடுத்ததால் தான் ரசீது கொடுப்பேன் என்று கூறியதால் கணேசன் 10,000 ரூபாயை ராமராஜிடம் கொடுத்தார். அப்போது பணத்தை பெற்ற ராமராஜ் பாக்கி தொகையை கொடுத்துவிட்டு ரசீது பெற்றுகொள்ளுமாறு தெரிவித்ததார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணேசன் உடனடியாக ராமநாதபுரம் ஊழல் கண்காணிப்பு தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் துணை சூப்பிரண்டு அதிகாரி உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் உடனடியாக பாண்டுகுடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் கணேசனிடம் ரசாயன பவுடர் தடவிய 23,540ரூபாயை கொடுத்து ராமராஜிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். இதனைதொடர்ந்து கணேசனும் அதிகாரிகள் கூறியது போல் ராமராஜிடம் அவர் கேட்ட லஞ்ச பணத்தை கொடுக்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து ராமராஜிடம் இருந்த 65 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.