மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் குமார் அதே பகுதியில் வசிக்கும் செல்லப்பாண்டி என்பவருடன் திருமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் திருமங்கலம்-விருதுநகர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த கார்த்திக் குமார் மீது அரசு பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.