கருக்கலைப்பு செய்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழப்பாடி கிராமத்தில் தொழிலாளியான சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வி மூன்றாவதாக கர்ப்பமானார். இதனையடுத்து செல்வியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் வயிற்றில் வளரும் சிசுவிற்கு இதயக் குறைபாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இருதய குறைபாட்டுடன் குழந்தை பிறந்தால் சிரமம் ஏற்படும் என கருதிய செல்வி அதனை கலைக்க முடிவு செய்துள்ளார். அப்போது கர்ப்பமாகி 5 மாதங்கள் ஆனதால் கருவை கலைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கீழப்பாடி கிராமத்தில் இருக்கும் ஒரு தனியார் மருந்து கடையில் கருகலைப்பு செய்யப்படும் என செல்விக்கு தகவல் கிடைத்ததால் அவர் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து கருக்கலைப்பு செய்த போது செல்விக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு காரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு செல்வியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருக்கலைப்பு செய்த குற்றத்திற்காக மருந்துக்கடை உரிமையாளர் மணிகண்டன், அவரது மனைவி முத்து குமாரி, உதவியாளர் கவிதா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.