கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதி விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் சின்ன பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் தனது நண்பரான கௌதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தினேஷ் மற்றும் கௌதம் ஆகிய இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.