Categories
தேசிய செய்திகள்

பஜ்ரங்தள பிரமுகர் கொலை வழக்கு…. 2 இளம்பெண்களுக்கு தொடர்பு…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!!

பஜ்ரங்தள  அமைப்பு பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைதான நிலையில் மேலும் 2 இளம் பெண்களுக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிவமொக்கா டவுன் பகுதியில் உள்ள சீகேஹட்டியில் கடந்த 20 ஆம் தேதி அன்று பஜ்ரங்தள  அமைப்பு பிரமுகர் ஹர்ஷா (வயது 24) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காசிப், சையது நதீம், அசிபுல்லா கான், ரிஹான் கான், அப்துல் அர்பான், நெகால் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் சிவமொக்காவில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று வரை 144 தடை உத்தரவும், ஊரடங்கும் போடப்பட்டுள்ளது. எனவே கடந்த 4 நாட்களாக சிவமொக்காவில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் இரு தரப்பினரிடையே எந்த நேரத்திலும் மோதல் ஏற்படலாம் என்ற காரணத்தால், 7 டிரோன் கேமராக்கள் உதவியுடன் கடலோர சிறப்பு காவல் படையினர் சிவமொக்கா நகர் முழுவதையும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஹர்ஷா கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சம்பவத்தன்று 2 இளம்பெண்கள் அவரை நேரில் சந்தித்து பேசி உள்ளதாகவும், ஆனால் அவர்கள் ஹர்ஷாவுக்கு முன்பின் தெரியாத நபர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இந்த 2 இளம்பெண்களும் ஹர்ஷாவின் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்புகொண்டு பேசி உள்ளதாகவும், ஆனால் அப்போதும் அவர்கள் யார் என்று தெரியாது? என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து சம்பவத்தன்று ஹர்ஷாவை சந்தித்த அந்த பெண்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற அவரை தடுத்து நிறுத்தி, நடந்து வருமாறு கட்டாயப்படுத்தி அழைத்து சென்று உள்ளதாகவும் தெரிகிறது. அப்போதுதான் மர்ம நபர்கள் ஹர்ஷாவை   படுகொலை செய்திருக்கலாம். இதனால் இச்சம்பவத்தில் 2 இளம் பெண்களுக்கும் சம்பந்தம் இருக்கும் என்னும் நோக்கில் போலீசார் அவர்களை பிடித்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஹர்ஷாவின் காணாமல் போன செல்போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். எனவே அதில் உள்ள தகவல்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரித்து ஆய்வு செய்து வருகிறார்கள். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |