உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் நேற்று அதிகாலை அதிரடியாக உத்தரவிட்டார்.
இதையடுத்து ரஷ்ய ராணுவம் உக்ரைனின் தலைநகரான கீவ், டோனஸ்க், மைக்கோல், மரியூபோல், கார்கிவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் நகரங்களில் குண்டுமழை பொழிந்தது. கடல் வழி, தரைவழி, வான் வழி என மும்முனை தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. எங்கு பார்த்தாலும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு வருகிறது. ராணுவ தளங்கள், விமான நிலையங்கள், கட்டிடங்கள் போன்றவை ஏவுகணைகளின் தாக்குதலில் பற்றி எரிந்து வருகின்றன. மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடி செல்கின்றனர்.
மேலும் குண்டுவீச்சில் குடியிருப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனுடனான முதல்நாள் போரில் ரஷ்யா வெற்றிபெற்றதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக காணொலியின் மூலமாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ரஷ்யப் படைகளின் பெரிய அளவிலான தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனியர்கள் 137 பேர் நேற்று உயிரிழந்தனர்.
மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளனர்” என்று கவலை தெரிவித்துள்ளார். அதேபோல் உக்ரைன் ராணுவம், ரஷ்யாவைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே உக்ரைன் நாட்டிலிருந்து 18-60 வயதுடையோர் வெளியேற தடை விதித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கீவ் நகரில் உள்ள மக்களுக்கு 10,000 தானியங்கி துப்பாக்கிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.