தூத்துக்குடியில் திமுக பிரமுகர் ஒருவர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் திமுக பிரமுகர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி தாளமுத்து நகரில் வசித்து வந்தவர் கண்ணன். டெய்லரான இவர், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து உறுப்பினராகவும் திமுக வட்டச் செயலாளராகவும் இருந்தார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு கண்ணன் வழக்கம் போல் கடையில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு கையில் அரிவாள் மற்றும் கத்தியுடன் வந்த 3 இளைஞர்கள் கண்ணனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, எஸ்பி ஜெயக்குமார், டவுன் டிஎஸ்பி கணேஷ், , எஸ்ஐகள் சரண்யா, சங்கர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.