ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப மற்றும் 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் தங்கள் மீது திணிக்கப்படும் பணி நெருக்கடியை குறைக்க கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். இதனையடுத்து முன்னாள் மாவட்ட தலைவர் தியாகராஜன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் பொன் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை தொடர்ந்து மாநில செயலாளர் சவுந்திரபாண்டியன், மாவட்ட செயலாளர் ஆதி.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினர். இதில் அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் போதிய ஊழியர் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட தலைவர் ரஜினி, வட்ட செயலாளர் கலையழகன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன் முடிவில் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.