காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் அடையாள அட்டையை காண்பித்து செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
தெற்கு ரயில்வே சார்பில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு சென்னை காவல் ஆணையர் மற்றும் ரயில்வே கூடுதல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் தமிழ்நாடு காவலர்கள் ரயில்களில் அடையாள அட்டையை காண்பித்து பயணிப்பதாக ரயில்வே நிர்வாகத்திற்கு அதிகப்படியான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் அடையாள அட்டையை காண்பித்து முன்பதிவு செய்த பயணிகள் இருக்கையில் அமர்ந்து முதல் மற்றும் இரண்டாம் பேட்டிகளில் பயணிப்பதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன.
அவ்வாறு பயணம் செய்யும் காவலர்களிடம் பயண சீட்டு கேட்டால் அவர்கள் ஆவணங்களை காட்டாமல் தங்களுடைய அடையாள அட்டையை காண்பித்து தொடர்ந்து அதே ரயிலில் பயணிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் இதுபோன்று காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி காவல்துறை வட்டாரங்களில் விசாரிக்கும்போது காவல் நிலையங்களுக்கு தேவைப்படும் ரயில் பயண பாஸ் குறைவான எண்ணிக்கையில் வருவதால் இதுபோன்று பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக கூறுகின்றனர். தமிழ்நாடு டி.ஜி.பி யாக சைலேந்திரபாபு பொறுப்பேற்ற பிறகு காவலர்களின் தேவைகள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதற்கும் தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.