ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்தது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். உக்ரைனை கைப்பற்றுவது எங்களின் நோக்கமல்ல, எங்களைப் பாதுகாத்துக்கொள்ள இதுபோன்ற நடவடிக்கை அவசியமானது என்று அவர் விளக்கமளித்துள்ளார். அதே நேரம் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று வரும் போரில் பிற நாட்டினர் யாரேனும் தலையிட்டால், அவர்கள் இதுவரையிலும் காணாத மோசமான அழிவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம் 2-வது நாளாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் சரணடைய மறுத்த 13 உக்ரைன் வீரர்களை ரஷ்ய கடற்படை கொன்றுள்ளது. உக்ரைனின் ஸ்னேக் தீவை நெருங்கியபோது போர்க்கப்பலில் இருந்த உக்ரைன் வீரர்களை, ரஷ்ய கடற்படை சரணடையும்படி வலியுறுத்தியுள்ளது. ஆனால் அவர்கள் சரணடைய மறுத்ததால், ரஷ்ய கடற்படையினர் அவர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..