செர்னோபில் அணுமின் நிலையத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு அளவு அதிகரித்து வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி செர்னோபில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது உலக வரலாற்றில் மிக மோசமான அணு உலை விபத்தாக பதிவாகியுள்ளது. மேலும் அன்றைய தினம் செர்னோபில் அணுமின் நிலையத்தின் 4-வது அணு உலை வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்போதைய சோவியத் ஒன்றியம் இந்த சம்பவத்திற்கு பிறகு செர்னோபில் அணுமின் நிலையத்தை சுற்றி கதிர்வீச்சு வெளியேறாத வகையில் காங்கிரீட் தடுப்புகளை அமைத்துள்ளது.
அதன்பிறகு 2000-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி செர்னோபில் அணுமின் நிலையம் நிரந்தரமாக மூடப்பட்டது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையான போர் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது. மேலும் ரஷ்ய படைகள் செர்னோபில் பகுதியில் உள்ள அணு ஆலையை மீண்டும் கைப்பற்ற முயல்வதாக தெரிகிறது. இது ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் எதிரான போர் பிரகடனம் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அணுமின் நிலையம் உக்ரேனின் தலைநகர் பகுதியிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த செர்னோபில் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சண்டை நடைபெற்று வருவதை சர்வதேச செய்தி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு அளவு அதிகரித்து வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருந்து காமா கதிர்வீச்சு அதிகரித்து வருவதை கண்டறியப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது தற்போது கதிர்வீச்சு அதிகரிப்பதற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.