தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்கள் அரைநிர்வாண கோலத்துடன் பெண்களை அச்சுறுத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி நஞ்சை ஊத்துக்குளியில் தீவன தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சாவடிப்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, சின்னியம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் அரை நிர்வாண கோலத்துடன் கையில் பணத்தை வைத்துக் கொண்டு தொழிற்சாலைக்கு பின்புறம் வசிக்கும் பெண்களிடம் தவறான சைகைகள் மூலம் அழைப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து அறிந்த மொடக்குறிச்சி காவல்துறையினர் தொழிற்சாலையின் பின்புறம் கண்காணிப்பு கேமராவை பொருத்த அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தவறான செயலில் ஈடுபடும் தொழிலாளர்களை கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.