திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் எச்சரித்து அனுப்பிய சம்பவம் குறித்து விளக்கம்கேட்டு இன்ஸ்பெக்டருக்கு சூப்பிரண்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள ரெங்கசாமிபட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் 2 தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் திருட முயன்றுள்ளார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக ராதாகிருஷ்ணனை பிடித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே பால் வியாபாரியின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்துள்ளது.
இதனைதொடர்ந்து நடத்திய விசாரணையில் ராதாகிருஷ்ணன் தூய தமிழிலும், ஆங்கிலத்திலும் நகைச்சுவையாக வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது ராதாகிருஷ்ணன் தான் போதைக்கு அடிமையாகி மன நல காப்பகத்தில் சிறிது காலம் சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறித்தும், அடிக்கடி மோட்டார் சைக்கிளை திருடி ஓட்டிவிட்டு பெட்ரோல் காலி ஆனதும் அதனை எதாவது ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு தப்பியோடி விடுவதையும் கூறியுள்ளார். இவற்றை கேட்டறிந்த போலீசார் ராதாகிருஷ்ணனை கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதனை காவலர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில் சிலர் காவல்துறையினர் மீது பல்வேறு விமர்சனங்களை எழுப்பினர். இதனை பார்த்த மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே, திருட்டில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கம் கேட்டு பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் மதனகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.