லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளைப்பனேரியில் விவசாயியான மனோஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு பெறுவதற்காக தென்காசி மாவட்டத்திலுள்ள பழங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் 3,500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்குவதாக வணிக ஆய்வாளர் மோசே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனோஜ் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 3,500 ரூபாயை மனோஜ் மோசேயிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மோசேயை கையும் களவுமாக பிடித்துவிட்டனர்.