ஆற்றில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதுக்காடு பகுதியில் முகமது சாலின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாசர் அராபத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் யாசர் அராபத் தனது நண்பர்களான பிரசாந்த், ஹரிபிரசாத், பரமேஸ்வரன் ஆகியோருடன் மங்கலத்தில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். இதனை அடுத்து 4 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது யாசர் அராபத் மட்டும் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவரை காணாததால் அவருடைய நண்பர்கள் சிலர் அவரை தேடினர்.
ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவரது நண்பர்கள் இதுகுறித்து மங்கலம் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் யாசர் அராபத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தீயணைப்பு துறையினர் தண்ணீருக்குள் மூழ்கி இறந்து கிடந்த யாசர் அராபத்தின் உடலை கரைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் யாசர் அராபத்தின் உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த மங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.