மாணவர்கள் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பிராட்வேயில் பகுதியிலிருந்து கொடுங்கையூர் பகுதிக்கு அரசு மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தங்கசாலை பேருந்து நிலையத்தில் இருந்து மாணவர்கள் பலர் பேருந்தில் ஏறியுள்ளனர். ஆனால் மாணவர்கள் யாரும் பேருந்தின் உள்ளே வராமல் படிக்கட்டில் நின்றுள்ளனர். இதனால் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மாணவர்களை உள்ளே வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறு கைகலப்பாக மாறி பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை மாணவர்கள் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ஓட்டுநர் கணேசன் மற்றும் நடத்துனர் பாபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் 2 மாணவர்களை மட்டும் பிடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த 2 மாணவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.